Tuesday, February 9, 2010

காலம் தோறும் காதல் ஊறும்


இது எங்கள் அலுவலகத்திலுள்ள வலைப்பூவில், காதலர் தினத்தை முன்னிட்டு நடத்தப்படும் போட்டிக்காக எழுதப்படும் தொடர்.
***********************************************************************************************************************
மலரிலிருந்து விதை உருவாகத் தொடங்கும்போது ஒவ்வொரு இதழாக உதிருவதைப் போல, இந்தப் பதிவை எழுதத் தொடங்கியதும் என் வயது ஒவ்வொன்றாகக் குறையத் தொடங்கியது. விட்டால் குழந்தையாகியிருப்பேன்... காதல் தான் என்னைத் தேக்கி வைத்திருக்கிறது. திருவிழாவிற்கு தேர் தயார் ஆவது போல, காதலைப் பற்றி எழுதுவதற்கு எனது ஒவ்வொரு செல்லும் தயாராகியது. ஊருக்குப் போவதற்கே எவ்வளவு ஆயத்தமாகிறோம். ஒரு உயிருக்குள் போவதைப் பற்றி எழுத எவ்வளவு மெனக்கெட வேண்டும்? காதலைப் பற்றிய சிந்தனைகள் என்னை அழகாக்கிவிட்டிருந்தன. சுற்றி நிகழ்ந்தவைகள் யாவையும் காதலாக மொழி பெயர்த்தேன். எல்லாம் காதலும் காதல் சார்ந்த இடமாகவே காட்சியளித்தன. காதல்...காதல்...காதல்...

இரண்டு குழந்தைகளிடம் க்ரீம் கேக்கை கொடுக்கின்றோம். ஒரு குழந்தை கிரீமை முதலில் சாப்பிட்டுவிடுகிறது. மற்றொரு குழந்தையோ கிரீம் இருக்கிற பகுதியை அடியில் வைத்துகொண்டு, சுவை குறைந்த கேக்கை முதலிலும் கிரீமை கடைசியிலும் உண்ணுகிறது. இப்போது இரண்டு குழந்தைகளிடமும் கேக்கின் சுவையை பற்றிக் கேட்டால் என்ன சொல்லும்? இப்படித்தான் நாமும் காதல் எனும் கேக்கையும் உண்ணுகிறோம். ஒரு பெண்ணை ஆணை நெருங்குவதற்கான வெறும் துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தினோமேயானால், தேவை தீர்ந்ததும் காதலும் கசந்து விடும்.

விரைந்தோடும் ஆறு
தவறி விழுந்துவிட்ட
எறும்பு
பற்றிக்கொள்ளக் கிடைத்த
ஒற்றை இலை
காதல்…


காதலிக்காதவர்கள் என்று யாருமே இல்லை. ஏதாவதொரு தருணத்தில் எல்லோரும் காதலை உணர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். அதில் சிலர் மட்டும் காதலை வெளிக்காட்டிக்கொள்ளாதவர்களாக இருக்கிறார்கள்.

அன்புக் களஞ்சியத்தில்
அடைத்து வைக்கப்பட்டிருக்கும்
அரியவகை உணவு
இரு இதயங்கள்
இரத்தம் பாய்ச்சி
மலரச் செய்யும்
மகோன்னத மலர்
ஒவ்வொரு உயிரும்
ஒளிவுமறைவாகவேணும்
வாசித்துவிட்டுச் செல்லும்
ஒற்றை வரி
காதல்.


இந்தப் பதிவை எழுத எனக்குத் தகுதி இருக்கிறதா என்ற கேள்வி எழுந்தபோது, காதலிப்பதற்கு தகுதியே தேவை இல்லை என்று தானே ஆண்டாண்டு காலமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். பிறகு எழுத மட்டும் என்ன தகுதி வேண்டும்? நாம் எழுதலாமா என்ற கேள்வியைத் தூக்கியெறிந்துவிட்டு ஆரம்பித்துவிட்டேன். நீங்களும் படிக்கத் தொடங்குங்கள். ஒரு கை பார்க்கவேண்டாம். இரு கைகள் கொண்டு அணைத்திடுவோம், காதலை... ஒரு குழந்தை நம்மோடு கண்ணாமூச்சி ஆடுகிறபோது, பெரும்பாலும் அதன் இருப்பிடத்தை நாம் தெரிந்து வைத்திருப்போம். ஆனாலும் குழந்தையைக் கண்டுபிடிக்க முடியாதது போல் பாசாங்கு செய்துகொண்டிருப்போம். நேரம் ஆக ஆக குழந்தை குதூகலத்தின் எல்லைக்கே சென்று, பின் ஓடி வந்து நம் முதுகில் ஏறி அமர்ந்துகொண்டு நம்மை எள்ளி நகையாடுமே அதுவல்லவா சந்தோசம். அதுபோல காதலும் தன் ஒளிவிடம் விட்டு ஒருநாள் நம் இதயத்தில் ஏறிவந்து அமரத்தானே போகிறது!.. காத்திருத்தல் சுகமென காதல் தானே நமக்குப் பாடம் சொல்கிறது!

நீண்ட வரிசையில்
மிகப் பின்னால் நிற்கையில்
காத்திருப்பின் வலியை
நீடிக்கச் சொல்கிறது
மனசு
எனக்கு முன்னால்
நீ


நம்மில் பலர் முதல் சந்திப்பில் காட்டுகிற ஆர்வத்தை நூறாவது சந்திப்பில் காட்டுவதில்லை. அப்படியே ஆர்வமிருந்தாலும் அதை ஒரு சம்பிரதாயமாக, சாதனையாகக் கொண்டாட மட்டுமே செய்கிறோம். ஒரு விளையாட்டுப் போட்டியில் பங்குபெறுகிற பலரில் முதல் இரண்டு அல்லது மூன்று இடங்களைப் பிடிக்கிறவர்களை மட்டுமே கவனிக்கிறோம். காதலையும் அதே மனோபாவத்தில் அணுகலாமா? காதல் எல்லாவற்றையுமல்லவா கவனிக்கச் சொல்கிறது.

முதல்முறை சந்தித்தது போல
இப்போது நீ
இல்லவே இல்லை…
இன்னும் இன்னும்
அழகாகிக் கொண்டேயிருக்கிறாய்
எண்ணிக்கை கூடக் கூட
என்ன செய்வேன்
என்னன்பே…
கட்டுக்கடங்காத உன்
அழகை எந்தக்
கறுப்புப் பெட்டியில்
அடைப்பேன்?


பலருக்கு கண்ணாடி முன் நின்று தன்னைப் பார்த்துக் கொள்வதில் விருப்பம். அழகு கூடி இருக்கிறதா? குறைந்திருக்கிறதா? என்றெல்லாம் பார்ப்போம். அப்படி காதலைப் பார்க்கிறோமா? எத்தனை பேர் நம் காதல் கூடி இருக்கிறதா என்று சுய மதிப்பீடு செய்கிறோம்? நம் கவலையெல்லாம், புறம் சார்ந்தவையாகவே இருக்கின்றது. அதனால்தான், அகம் சார்ந்த காதலை புறம் சார்ந்து மதிப்பீடு செய்கிறோம். நிச்சயமற்ற தன்மையில் இருக்கும் வரை நம் துணையை மிக நேசிக்கிறோம். இனி நமக்குத்தான் என்றான பிறகு கண்டுகொள்ளவே மறுக்கிறோம். இந்த மனோபாவம் தானே பல காதல்களை திருமணத்திற்குப் பின் தோல்வியில் வீழ்த்தியிருக்கிறது. இடைவெளி அதிகமாக அதிகமாக காதல் குறைந்து போனவர்களையும் நாம் பார்க்கத்தானே செய்கிறோம்.

உரச உரச
தீப்பெட்டியையே
பற்ற வைக்கிற
தீக்குச்சி
நீ


காதல் ஒரு நாட்குறிப்பு. அதன் பல பக்கங்களை எழுதாமலே விட்டுவிடுகிறோம். தினம் தினம் எழுத வேண்டும். வெறும் மையால் அல்ல. பெண்மையை ஆண்மையால் எழுதுங்கள். ஆண்மையை பெண்மையால் எழுதுங்கள். தூய அன்பால், முத்தத்தால் எழுதுங்கள். பின்னொரு நாளில் நம் இளமைக்காதலைப் புரட்டிப் பார்க்கிறபோது வெறுமை என்ற ஒன்று காட்சியளிக்காதபடி பார்த்துக்கொள்ளுங்கள்.


படங்கள் இல்லாத
பாடப்புத்தகத்தில்
நீ வந்து அமர்ந்து கொள்வதால்
புரட்டப் புரட்ட
படப் புத்தகமாகவே
காட்சியளிக்கிறது!


இனி மனம் முழுவதும் காதலை நிரப்பிக் கொண்டு காதல் வரிகளுக்குள் போவோமா. கவனமாகக் கடந்து செல்லுங்கள், இனி வரும் வரிகளை. எல்லாம் இதயம் சார்ந்தவை...

மின்காந்தஅலைகளை உமிழும்
அவளினிரு கண்களைத்
தவிர்க்கவேண்டி
தலை கவிழ்த்தேன்
பாதங்களில்
பத்துக்கண்கள் கொண்டு
வெறிக்கிறாள்


அவனும் அவளும் மழையை ரசிக்கிறார்கள். அவன் காகிதக் கப்பல் செய்து மழை நீரில் விடுகிறான். அவளோ தானும் அந்தக் கப்பலில் பயணம் செய்யவேண்டும் என்கிறாள். சரி நானும் கூட வருகிறேன் என்று இவன் சொல்கிறான். பிறகு தங்களையே சமாதானம் செய்துகொண்டவர்களாக, நாம் வேண்டாம் நம் காதலை அனுப்பலாம் என முடிவு செய்கிறார்கள். இருவரும் கரங்களை ஒன்று சேர்த்து கவனமாக அவர்கள் காதலை கப்பலில் வைத்து மிதக்கச் செய்கிறார்கள். மழைநீர் விழ விழ காகிதம் ஊறி ஒரு கட்டத்தில் மூழ்கிவிடுகிறது. அதைக் காணச் சகிக்காதவளாய் கவலை கொள்கிறாள். அவனோ, நம் காதலை சுமக்க முடியாமல் கப்பல் மூழ்கி விட்டது. நம் காதல் அவ்வளவு கனமானது என்கிறான். அவள் அவனது தோளில் சாய்ந்து கொள்கிறாள்... அவளது நெற்றியில் முத்தம் வைக்கிறான் அவன். அதுவரை அவளது புருவங்களுக்குக் கீழே உறைந்துகிடந்த காதல் ஆனந்தமாக உருகத் தொடங்குகிறது...

எல்லோரும்
காதலைக் கொண்டாடுகிற
வருடத்தின் இந்த ஒருநாளாவது
ஓய்வெடுக்க..லா..ம்… எனச்
சொல்லிக்கொண்டிருக்கும் போதே
உச்சி நெற்றியில் விழுந்தது
முத்தம்தான் என உணர்வதற்குள்
உதடுகளை உஷ்ணப்படுத்தியது
இன்னொரு முத்தம்.

நட்புடன்,
நாவிஷ் செந்தில்குமார்

4 comments:

கார்த்திகைப் பாண்டியன் said...

கவிஞர்னு காமிச்சுட்டீங்க பார்த்தீங்களா.. தொடர்னு போட்டுட்டு கட்டுரை எழுதுற மாதிரி காதலை கவிதைகளால் கொண்டாடி இருக்கீங்க.. எறும்பு பற்றிய இலையாய் காதல்.. வாவ்.. அருமை நண்பா..

கார்த்திகைப் பாண்டியன் said...

கடைசி சில பகுதிகள் தெளிவா இல்ல நண்பா.. என்னன்னு பாருங்க

நாவிஷ் செந்தில்குமார் said...

@கார்த்திக்
நன்றி!
ஆம், அவசரத்தில் எழுதி, பதிவு செய்துவிட்டேன். ஒரு தொடர்ச்சி இல்லாமல் இருக்கிறது.
சரிசெய்துவிடலாம்

கோபால் said...

உச்சி நெற்றியில் விழுந்தது
முத்தம்தான் என உணர்வதற்குள்
உதடுகளை உஷ்ணப்படுத்தியது
இன்னொரு முத்தம்.//

marvellous....