Tuesday, February 2, 2010

சாலையைக் கடக்கும் குழந்தை

ஒரு குழந்தை
சாலையைக் கடக்க
உதவக் கோரினால்
சட்டென்று செயல்படாதீர்கள்!
00
சிறுமலரை
உள்ளங்கையில் வைத்து
விரல்களைக் குவித்து
மூடித்திறக்கையில்
இதழ்கள் கசங்கவில்லை
என்றால் மட்டுமே
அதன் கரங்களைப்பற்றுங்கள்!
00
கடக்கும்போது
எதிர்புறத்தை அடைவதில்
அவசரம் காட்டாதீர்கள்
வாகனத்தில் வருபவர்களையும்
காத்திருக்கச் சொல்லுங்கள்!
00
மறுமுனையை அடைந்ததும்
'இனி நீயாகப் போய்விடு'
என்று சொல்லி
கிளம்பிவிடாதீர்கள்
பள்ளிவரையோ
வீடுவரையோ அழைத்தால்
போய்வாருங்கள்...
00
அலுவலகத்திற்கு
நேரமாகிவிட்டதாகவோ
இதர வேலைகள் இருப்பதாகவோ
துளியும்
காட்டிக்கொள்ளாதீர்கள்
எவ்வளவு நேரமானாலும்
விடைபெறும் முடிவை
குழந்தையிடமே விட்டுவிடுங்கள்.
00
உங்கள் வயதை
அனுபவத்தை
முடியும்வரை குறைந்துவிடுங்கள்
உலகத் தொடர்பிலிருந்து
முற்றாகத் துண்டித்துக்கொள்ளுங்கள்
அதற்குத் தெரிந்த கதைகளை
அதன் மொழியில்
அப்படியே சொல்லவிடுங்கள்
இடையிடையே
'ம்ம்...ம்ம்...' எனச் சொல்லுங்கள்.
00
விண்மீன்கள்தான் தனக்கு
விளையாட்டுப்பொருட்கள்
எனச் சொன்னால்
உடைந்த அல்லது
பழையதாய் ஒன்றை
அதனிடமிருந்து
கேட்டு வாங்கிக்கொள்ளுங்கள்!
00
சில முத்தங்களைக் கொடுத்தால்
எச்சிலைத் துடைத்துவிடாதீர்கள்
காய்வதற்குள் வீடுவந்து
நாட்குறிப்பில்
'சொர்க்கத்தைச் சுகித்த
தினம்' என மறக்காமல்
குறித்துவைத்துக்கொள்ளுங்கள்!

நன்றி : கீற்று.காம், உயிரோசை, ஆனந்த விகடன்

13 comments:

ஆறுமுகம் முருகேசன் said...

தெளிந்த நீரோடையில் சிறு கூட்டமாய் மீன்கள் நீந்துவதை ரசிப்பதுபோல ஒரு உணர்வு ஏற்படுகிறது மனதினுள் மிகவும் மெலிதாக...

கவிதை மிக மிக அழகு... :)

பா.ராஜாராம் said...

ரொம்ப பிடிச்சிருக்கு நாவிஷ்!

மாதேவி said...

"சாலையைக் கடக்கும் குழந்தை" மனத்தை இதமாய் வருடி நிற்கிறது.

"சிறுமலரை உள்ளங்கையில் வைத்து....." நன்றாகக் கணித்துள்ளீர்கள்.

PPattian : புபட்டியன் said...

குழந்தையுடன் நடந்த அழகிய அனுபவம் தந்தது..

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ஒரு கொடூர வாக்குமூலம்

'பெல் அடிச்சேன் ஒதுங்கலை... அதனால...''


செல்ல நடை... சிணுங்கல் பேச்சு... என குழந்தைகள் சம்பந்தமான விளம்பரங்கள் வந்தால்கூட முகம் மலர்ந்து பார்க்கத் தோன்றும் நமக்கு. ஆனால், அற்பக் காரணத்துக்காக சிரிப்பும் மழலையுமாக நடந்துவந்த ஒரு சிறுமியின் தலையை வெட்டி கொலை செய்திருக்கிறான் ஒரு கொடூரன். அந்த கொடும் பாதகம் அரங்கேறி இருப்பது செம்மடை என்ற கிராமத்தில்!


http://www.vikatan.com/jv/2010/jan/31012010/jv0601.asp

இந்தச் செய்தியையும் படியுங்கள் கவிகளே!!!!

நாவிஷ் செந்தில்குமார் said...

நன்றி ஆறுமுகம் முருகேசன் மற்றும் பா.ரா

நாவிஷ் செந்தில்குமார் said...

நன்றி மாதேவி மற்றும் புபட்டியன்.

நாவிஷ் செந்தில்குமார் said...

//
அற்பக் காரணத்துக்காக சிரிப்பும் மழலையுமாக நடந்துவந்த ஒரு சிறுமியின் தலையை வெட்டி கொலை செய்திருக்கிறான் ஒரு கொடூரன். அந்த கொடும் பாதகம் அரங்கேறி இருப்பது செம்மடை என்ற கிராமத்தில்!
//

அரக்கனைப் பற்றிய செய்தி!
:(

செல்வராஜ் ஜெகதீசன் said...

Good one Navish.

Keep going.

கதிரவன் said...

இந்தக்கவிதை ரொம்ப நல்லா இருக்குது செந்தில் !

நாவிஷ் செந்தில்குமார் said...

வருகைக்கும், வாசிப்பிற்கும் மிக்க நன்றி! செல்வராஜ் ஜெகதீசன் மற்றும் கதிரவன்.

KarthigaVasudevan said...

//எவ்வளவு நேரமானாலும்
விடைபெறும் முடிவை
குழந்தையிடமே விட்டுவிடுங்கள்//

/விண்மீன்கள்தான் தனக்கு
விளையாட்டுப்பொருட்கள்
எனச் சொன்னால்
உடைந்த அல்லது
பழையதாய் ஒன்றை
அதனிடமிருந்து/
கேட்டு வாங்கிக்கொள்ளுங்கள்!/


இந்த வரிகளை மிக ரசித்தேன் .

நாவிஷ் செந்தில்குமார் said...

வருகைக்கு நன்றி கார்த்திகா வாசுதேவன்!