Wednesday, August 22, 2007

முதியோர் இல்லங்கள்


வாழும் தெய்வங்கள்
கூடி வாழ்வதால்
கோயில்களாகின்றன
முதியோர் இல்லங்கள்!

புதியன புகுதலும்
பழையன கழிதலும்...
பொருள் வேறாய்ப்
புரிந்துகொண்டவர்களின்
மண உறவு
பெற்றவர்களின் மன முறிவு

இருந்த கடவுளை
துரத்தி விட்டு
எதையோ தேடுவான்
பூஜை அறையில்....

அன்று
தந்தைகள் கான்வென்டில்
கட்டிய தொகைகள் - இன்று
பிள்ளைகளால்
தவனை முறையில்
சேர்க்கப்படுகின்றன...
வயோதிகர் காப்பகங்களில்

பூட்டிய வீட்டிற்கு
காவல் காக்க
நாயை வளர்ப்பான்
ஈன்ற தாயை மட்டும்
ஏதோவொரு
முதியோர் இல்லத்தில் சேர்ப்பான்

கட்டிலின் சத்தத்தில்
கரைந்து போகின்றனவோ
பெற்றோரின் கதறல்கள்?

வந்தவழியை
மறந்தவர்களுக்கு மட்டும்
கருவறையே
கல்லறையாக மாறக்கூடாதோ?
--நாவிஷ் செந்தில்குமார்

அன்னப்பறவை


அன்னப்பறவை இனம்
அழிந்து போனதாக
சொல்கிறார்கள் - இன்னும்
உன்னை பார்க்காதவர்கள்...
தேவதையின் கனவில்
பேய்கள்தான் வரும்
என சொல்வார்கள்
எனவேதான் உனக்கு மட்டும்
டெவில் ட்ரீம்ஸ்
சொல்கின்றேன்.
எல்லோருடைய வாயிலிருந்து
வார்த்தையாக வருவது
உன்னிடம் மட்டுமே
வரமாக வருகிறது.
பூக்களின் தேன்
குடித்து சலித்துப் போன
வண்டுகள் - உன்
வியர்வையை சுவைத்து
வாழவே ஆசைப்படுகிறதாம்!
நீ தூங்கினால் - உன்
கனவாக வேண்டும்
துயில் கலைந்தால் - உன்
நினைவாக வேண்டும்
உன் இதழ் நடுவில்
இளைப்பாறும்
காற்றாக வேண்டும் - உன்
விரல் சொடுக்கில்
வெளியாகும்
ஒலியாக வேண்டும்.
பார் ரதியே!
உன் அழகை பாடினால்
எக்கவியும்
பாரதியே!..
--நாவிஷ் செந்தில்குமார்

Friday, June 22, 2007

பார்வை


இரவுக்கும் பகலுக்கும்
இடையிலான
இளங்காலைப் பொழுது...
ஞானச் செருக்குடன்
வானம் நோக்கிய
பசும் புல்வெளிகள்
குணமகள் கோலமாய்
தலை குனிந்திருக்கின்றன...
புல்லின் நுனியில் பனித்துளி
சிலர் நினைக்கக் கூடும்
தென்றல் வந்து
தழுவல் கொண்டு
தந்த முத்தத்தின்
அடையாளமாய்
உறையாத உமிழ்நீரோ?
உழைப்பின் முடிவில்
சிந்திய வியர்வை துளியோ என்று!
யார் உணரக்கூடும்?
வலிக்குமென்று தெரியாமல்
வன்மமாய்
கால் பதித்து ஒருவன்
காயப்படுத்தியதால் வந்த
கண்ணீர் துளியே என்று
வெற்றுப் பார்வைக்கு
விளங்கிடுவதில்லை
உற்று நோக்கினாலே புரியும்
புல்லிற்க்கும் உயிருண்டு...
உணர்வுகள் தாங்கும்
ஓர் இதயமுண்டு
---நாவிஷ் செந்தில்குமார்

காயாமரம்

முழுமையற்ற வார்த்தைகளை
மொழிந்து என்னை அழைப்பீர்கள்
முந்தானை பற்றி - என்
சிந்தனை கலைப்பீர்கள்

கட்டியணைக்கும் நோக்கோடு
கையிரண்டை விரிப்பீர்கள்
காலையில் குளித்த என்னை
அழுக்காக்கத் துடிப்பீர்கள்
கடைசியில் என் மார்பில்
கன்னம் வைத்துப் படுப்பீர்கள்

உங்களின் ஒவ்வொரு செயலிலும்
உள்ளது சொர்க்கமே
இப்படியே காலம் போனால்
என் வாழ்வும் சுவைக்குமே

பெற்றெடுக்கவில்லை என்றாலும்
பிள்ளைகள் என்றானீர்கள்
மடியில் பரவி - மனதில்
மகிலம்பூ மலரச் செய்தீர்கள்

சொல்லுங்கள்! சொல்லுங்கள்!!
அருமை மழலைகளே
"அம்மா" என்றொரு முறை
அலறுங்கள்...

மாலையில் அடங்கிடும்
சத்தம்
மழலைகளை அழைக்கும்
வீடுகள் தத்தம்!

மடியில் கனமில்லை என்றால்
வழியில் பயமில்லை என்பார்களே!
என் மடியில் கனமில்லை
அதனால் என் வாழ்க்கையே
பலனில்லையே!
குப்பைத்தொட்டிகள் கூட
குழந்தைகள் சுமகின்றனவே
என் குறுவயிற்றுக்கு
கொடுப்பினை இல்லையே!

இறைவா!
முகம் பார்க்க
கண்ணாடி தந்தாய் - அதில்
மூலம் பூச
மறந்து போனாயே!

என்னை இடுகாடு
இட்டுச் செல்லவிருப்போரே
இறந்தபிறகு என் புதைகுழியில்
பூக்களை தூவாதீர்கள்
புழுக்களை தூவுங்கள்!
அவை என் அடிவயிற்றில்
துள்ளக்கண்டு
என் ஆத்மா
சாந்தியடையட்டும்! - கூடவே
என்னை புதைத்த இடத்தில்
புற்பூண்டுகளை
வளரவிடுங்கள்
அவைகளை தின்றுவிட்டு
ஆடுமாடுகளாவது
"(அ)...ம்...மா..." என்றலரட்டும்!
---நாவிஷ் செந்தில்குமார்

Sunday, June 17, 2007

ஒரு கல்லறை பேசுகிறது!

உன் காது மடல் சிவந்தாலே
துடிதுடித்துப் போவானே - இவன்
ஜீவன் துவண்டு போகையில்
கொஞ்சமேனும் வலித்ததா உனக்கு?
நீக்கமற உன் நினைவுகள் சுமந்தவன்
உறங்காமல் காத்துக் கிடந்த
நாட்கள்தான் எத்தனையோ?
இந்த நிரந்தர உறங்கலுக்காக...
வாழுகையில் மரணம் தேடியவன்
வானுலகில் மானுடம் தேடுகின்றான்

என்றேனும், உன் சந்ததியின்
சடங்கு முடிக்க
கல்லறை நோக்கி வருகையில்
ஒரு கவியின் சத்தம் கேட்டால்
சற்று செவி சாய்த்துவிட்டுப் போ பெண்ணே!

கல்லறைக்குள் உடல் புதைத்து
வெளியே...
காவல் காக்கின்ற பாவி இவன்!
நீ மரணித்து வருவாய் என்றல்ல
மலர் கொண்டு வருவாய் என...

உனது புரிந்து கொள்ளலுக்காகவே
புதைந்து கிடக்கின்றன
இவன் காதலின்
புகழ் மொழிகள்
பூக்கள் பறிக்கையில்
உன் விரலில் முள் பதிக்கும்
ரோஜாக்களின் மொழிகளை
கேட்டுப்பார்
இவன் மரணத்தைப் பேசும்

சில கணமேனும் நீ
சூடிய பூக்களை
கல்லறையில்
பூஜைக்கென வை
அப்போதாவது, அவனது
ஆன்ம தாகம் அடங்கட்டும்

காதல் இருந்தால்
உன் இதழ் பதித்து
எச்சில் தடவி ஜீவனை
ஈரப்படுத்திவிட்டுப் போ!
இல்லை
கருணை இருந்தால்
சிறிது கண்ணீர் விட்டுப் போ!
அவனுக்கு தாகம் என்றால்
தண்ணீராகட்டும்
இல்லையென்றால்...
காறி உமிழ்ந்துவிட்டுப் போ!
இதுவே
காதலுக்காக செத்தவனின்
கடைசி சமாதியாகட்டும்!..
---நாவிஷ் செந்தில்குமார்

Wednesday, June 6, 2007

வரைகோட்டு ஓவியங்கள்


முந்தைய நாட்களின்
ஏதோ ஓர் இரவில்
முகமறைத்துக் கொண்டதென்
எதிர்காலம்

காலைக் கதிரவனின்
கதகதப்பில்
உயிர் பெறலாம் என்றால்
நான் பனித்துளியா?
புல்வெளியா?

விதை விதைத்தவர்
யாரோ?
வினை அறுப்பது
நானே!

பிறப்பளித்வள் - சேர்த்தே
இறப்பையும்
எழுதிவிட்டுச் சென்றுவிட்டாள்
சிசுக் கொலையிலிருந்து
சிறை விடுத்தவள்
உயிர் கொல்லி நோயை
உடன் அளித்தாளே!
கள்ளிப்பால் கொடுக்க
தவறியவள்
கொள்ளி போட்டு சென்றாளே
நான் என்ன
சாபத்தின் ஒட்டுமொத்த
சாயல் வாங்கி
வந்தேனா?
இல்லை பாவத்தின்
முகவரியை பகிர்வு
கொள்ள வந்தேனா ?

நான் கண்ட
சோகங்கள் - இங்கே
சொல்வதற்கில்லை!
அனுபவித்துதான்
ஆக வேண்டும்
மறுப்பதிற்கில்லை!

என் போன்றோரின்
வாழ்க்கை வெறும்
வரைகோட்டு ஓவியங்கள்!
நீங்களே
வண்ணம் தீட்ட வேண்டிய
மிகச்சிறந்த ஓவியர்கள்!
---நாவிஷ் செந்தில்குமார்

Saturday, June 2, 2007

காதல்

காதல் ஒரு
கைக்குழந்தை
வா! என்றழைப் போரிடம்
வாஞ்சையுடன்
ஓட்டிகொள்ளும்

பரிசுத்த ஆன்மாக்களின்
பராக்கிரமம்
அன்புக் களஞ்சியத்தில்
அடைத்து வைக்கப்பட்டிருக்கும்
அரியவகை உணவு

ஏற்றுக்கொண்டவருக்கு
இறைவன்
இல்லை என்பவர்தம்
பகுத்தறிவு

இரு இதயங்கள்
இரத்தம் பாய்ச்சி
மலரச் செய்யும்
மகோன்னத மலர்

கண்கள் வளர்க்கும்
ரகசியத் தேனி
காமம் இதற்கு
கசப்புத் தீனி

ஒவ்வொரு உயிரியும்
ஒளிவு மறைவாகவேனும்
வாசித்துவிட்டுச் செல்லும்
ஒற்றை வரி

இருளுக்குள்
பொருள் தேடுவதல்ல
காதல்
உயிருக்குள்
உயிர் தேடுவது...

---நாவிஷ் செந்தில்குமார்

பிரிவு


கண்கள்
ஈரமாகித்தான் போகின்றன
நாம் பிரிந்து
தூரம் செல்லும் - இந்த
துன்பியலை நினைக்கின்றபோது
கனவு பெருத்து
கல்லூரியில் சேர்ந்தேன்
நினைவுப் பருவாய்
நீ உதித்தாய்
ஒரு தட்டில்
உண்டு மகிழ்ந்தோம்
தெரு நடுவில்
கட்டிப் புரண்டோம்
தொடங்கிய சுவடுகள்
தொலைவதற்குள்ளாக
முடிவுரை என்பதிங்கே
முகிழ்த்ததேனோ?
உன் பிரிவு
ரணமாய் இருக்கிறது எனக்கு
பரவாயில்லை
நாளை நீ நாட்டும்
வெற்றிக் கொடியின்
நிழல் தரும் சுகம்...
அது போதும் எனக்கு
காகிதங்களில்
கண்ணீரை நிரப்பி
பிரிகிறோம் தோழா!
நாம் காணும் வலி நிகராக
கல்லறைச் சோகங்களும்
இருக்காது போலும்
விழிகேள மறுக்கிறது
விடை
தூறல்கள் ஒன்றேதான்
அதனது கொடை
கணினி வழியே
கடிதம் அனுப்பு
முடிந்தால்...
உன் சுவாசகாற்றிடம்
என் முகவரியைச்
சொல்லியனுப்பு
எனக்கு வேண்டும்
இன்னொரு பிறப்பு
அப்போதும்
நானே செய்வேன் - உன்
உயிரின் இடவலம் தொடும்
ஆக்கிரமிப்பு
இலக்கணம் கொண்டது
நமது நட்பு!
இதுவரை இயற்றிய
இலக்கியம் அறியாது
இதனது சிறப்பு
---நாவிஷ் செந்தில்குமார்

கவிஞன்


தமிழ் நனைந்த தேசத்தில்
புறம் வந்த
புற்றீசலாய்
சொற்களின் தேரில் ஏறி
நீண்ட நெடிய
கவிதைப் பாதையில்
உலாவர புறப்படுகின்றேன்...
வாழ்க்கையின் உரைநடையை
கவிதையாக்கத் துடிக்கின்ற
மனிதன் நான்
நிகழ்காலத்தை நிர்மூலமாக்கி விட்டு
எதிர்காலாம் பற்றிய கனாக்களில்
எண்ணங்களில் லயிக்கிறேன்
அகம் நிரம்ப
அழுக்குப் பட்டுக் கிடக்க
புறம் ஒன்று பேசி
புகழ் நிறைய ஈட்டுகின்றேன்
என் வீட்டில் உலை கொதிக்க
உ லை கொதிக்காத வீட்டுக்காரன்
குரலில் பேசுகிறேன்
ஆடை அணிகலன் சேர்க்க
நிர்வாணங்களை
பேசிப் புகழ்கிறேன்
வயல் வெடிப்புகளை
கண்ணீரால் பூசி
கவிதை எழுதத் துடிக்கிறேன்...
சுயத் தோடு போரிட்தேன்
நயமாய் நானும் உணர்ந்திட்டேன்
அவனுக்கு முன்னால்
நாமெல்லாம் பொம்மைகள்
என்கிற உண்மையை
உணர்ந்து
கர்வத்தைக் தொலைக்கிறேன்
காலம் எனையொருநாள்
மாற்றும்
கவிஞன் எனும்
பதத்தின் பொருளைப் புகட்டும்
காலத்தின் பார்வையில்
என் கவிதை வரிகள்
தூசுத்துகள் என
கம்பீரமாய் சொல்வேன்
காலத்தைப் போல் ஒரு
கவிஞன் இல்லையென...
---நாவிஷ் செந்தில்குமார்

நிலவே வா

நிலவுதான் நீ
எனக்கு
ஆனால் அமாவாசைகள்
அதிகம் உனக்கு
தேய்பிறையானாலும்
பரவாயில்லை
அவ்வப்போது
வந்து செல்
என் கனவுலகிற்கு...

---நாவிஷ் செந்தில்குமார்

மாற்றம்


அன்று
மதங்களும்
அதன் பண்டிகைகளும்
மடமை என்றிருந்தேன்.
இன்று
காதலை மதமாக்கி
உன்னை கடவுளாக்கி
உன் பிறந்த நாளில்
பண்டிகை கொண்டாடுகின்றேன்!
---நாவிஷ் செந்தில்குமார்

ஆயுள் ரேகை

நீ என்னைப்
பிரிந்து போகையில்
உறைந்து போனது
என் இரத்தம்
ஆனாலும் - உறையாத
உன் நினைவுகளால்
இன்னும்
இயங்கிக் கொண்டிருக்கிறது
என் இதயம்

---நாவிஷ் செந்தில்குமார்

புரிதல்


என் இதயம்
உன் பெயர் சொல்லித்
துடிக்கிறது
உன் இதயம்
என் பெயர் சொல்லித்
துடிக்கிறது
என் இதயத்துடிப்பை
நீயும்
உன் இதயத்துடிப்பை
நானும்
உணர்வதெப்போது?
---நாவிஷ் செந்தில்குமார்

காட்சி


இமை மூடி எனைத்தேடும்
இனியவளே
இமை பிரிந்தால்
காட்சி
அவ்வாறே நாமிருத்தல்
உண்மைக் காதலின்
சாட்சி
----நாவிஷ் செந்தில்குமார்

கோரிக்கை


தேகம் முழுவதையும்
தீயுண்டு போனாலும்
எஞ்சுகின்ற சாம்பலின்
எளிய உருவம்
நீ...
நீ வகிடெடுத்து சீவிய
கூந்தலின் நடுவில்
தெரிந்த
ஒற்றையடிப் பாதையில்
சென்று கொண்டிருக்கிறது
எனது வாழ்க்கைப் பயணம்...
உன் கால்களின் ரேகையில்
வகிர்ந்த கீற்றுக்களாய்
தெரிந்த பள்ளத்தில்
அடைபட்ட காற்றில்
சிறைபட்டுப் போனது
என் ஜீவன்
துப்பவும் முடியாமல்
விழுங்கவும் முடியாமல்
மென்று கொண்டிருக்கின்ற
சூயிங்கமாய்
உன் நினைவுகள்...
சுவாசக் குழலுக்கும்
உணவுக் குழலுக்கும்
இடையே சிக்கிய
ஒற்றைப் பருக்கை என
என் காதல்
இப்போது
காது அறுந்து போனது என
நீ கழற்றி எறிந்த
காலணியாக நான்...
காலணியோடு கால்களை கூட
எத்தனை முறை வேண்டுமானாலும்
மாற்றிக் கொள்!
தயவு செய்து இனி ஒருமுறை கூட
காதலை மாற்றிவிடாதே!
---நாவிஷ் செந்தில்குமார்

கண்ணீர்ப்பூ

ஒளி வாங்கி
உயிர் பெற்று வரும்
ஒவ்வொரு விடியலும்
சொல்லாமல் சொல்லிவிட்டுப்
போகின்றன...
என்னை ரணப்படுத்த
இருள் சூழ்ந்த
இன்னொரு இரவு
வரும் என்பதை

பிறப்பின் போது
கள்ளிப்பாலோடு போராட்டம்
தப்பியதால்
குப்பைத் தொட்டிக்கு
இடமாற்றம்
இளமையில்
வயிற்றுப் பிழைப்பிற்கே
திண்டாட்டம்
சில காலந்தொட்டு
பலரின் காமப்பசிக்கு
என் கண்ணீர் ஊட்டம்

மூச்சுவிடும் சடலங்களே
ஏந்தி சுமந்த தாய் போல
தாங்கி சுமக்கும் பூமி போல - மனம்
வெதும்பி உங்களை சுமக்கின்ற
பாவி நான்
என் விசும்பலோடு
வியர்வையும், விழி நீரும்
உங்கள் கல் நெஞ்சை கரைக்கவில்லையா?

வேலை கேட்டால்
சில வேளைக்கு அல்லவா
இருக்க சொல்கிறீர்கள்
இங்கு முதலாளிகளின்
தோப்பு வீடுகள்
அந்தப்புரங்களாகும்
அவலங்கள் இல்லையா?

உறவுகளோடும் - நல்ல
உணர்வுகளோடும்
பிறந்திருந்தால்
களவு புணர்ச்சியில்
களிப்பு கொள்வீரா?
எல்லாம் முடிந்தபின்
ஆடைளோடு மனிதன்
என்கிற முகமூடியை
அணிந்து செல்கின்ற
மிருகம்தானே நீங்கள்?

மாதம் மூன்று நாள்கள்
அவைதான்
என் நரகத்தின்
விடுதலை

இறைவா!
என்றாவது ஒருமுறை
எனக்குத் தாய்ப்பால்
சுரக்கட்டும் - கூடவே
அதற்கு நல்ல
தலையெழுத்தும் கிடைக்கட்டும்

---நாவிஷ் செந்தில்குமார்

Friday, June 1, 2007

பயணம்

பின்னோக்கி நகரும்
மரங்கள்
முன்னோக்கிச் செல்லும் என்
சாலைப் பயணத்தை
சமிக்ஞை செய்கின்றன...

கடந்ததையும்
கடக்கப் போவதையும்
நினைக்கின்ற பொழுது
நடந்து கொண்டிருப்பவை
தூரத்திலிருந்து நோக்கும்
ஒரு புள்ளியாய்...

மௌனங்கள் கண்டிராத
ஆர்ப்பாட்ட இரவுகள்
ஆழ் மனதில்
இப்போதும் நிழலாடுகின்றன
விலைபோகும் எனில்
அந்த கனவுகள்
விற்பனைக்கு

உழைக்க மறுப்பவனின்
உடலை
ஆறடி நிலம்கூட
அங்கீகரிப்பதில்லை
என்கிற உண்மை
இன்றும் கூட
உதாசீனப்டுத்தப்படுகிறது

நாடகங்களக்கிப்போன
நடைமுறை வாழ்க்கையில்
ஊடகங்கள் ஒருநாளும்
ஒழுக்கத்தை
வெளிக்கொணர்வதில்லை

ஏட்டுக் கல்வி மூலமும்
கேட்டறியவும் மட்டுமே
முடிகிறது
கூட்டுக் குடும்பங்களின்
மகத்துவத்தை

தனித்தோ
துணையுடனோ
அர்த்தமற்றதாய் இருந்தாலும்
அனிச்சையாய்
தொடரவே செய்கின்றன...
வாழ்க்கைப் பயணங்கள்

பயணங்கள் என்னவோ
பசுமையாகத்தான் இருக்கின்றன
எதையும் ஏற்றுக்கொள்கின்ற
பக்குவம் இருப்பதால்
பாதைகள்தான்
வெறிச்சோடிக்கிடக்கின்றன
பாலைவனங்களாய்...
--நாவிஷ் செந்தில்குமார்

என்னவள்

இதழ் பிரித்து
ஈறுகள் காட்டி
சிரிப்பது அழகா?
எனக்குத் தெரியாது
இப்போது தெரிகிறது!
என்னவள் சிரிக்கிறாள்...

நிலவை காட்டி

சோறு ஊட்டினாள்
அம்மா...
அந்த நிலாவே சோறூட்ட கண்டீரோ?
காணுங்கள்
என்னவள் குழந்தைக்கு சோறுட்டுகிறாள்

பாலைவனத்தில்
அந்த வறண்ட தேசத்தில்
குளிர்ந்த காற்று
தென்றல் போல
பசுமையாய் வீசுகிறது
காரணம் புரிகிறதா?
அங்கே
என்னவள் கூந்தல்
அசைகிறது...
--நாவிஷ் செந்தில்குமார்

கூண்டுப்புறா

தினமும் அந்த
வழியில் செல்கையில்
எதிர் வீட்டில் புறாக்களை
பார்ப்பது வழக்கம்
அன்று
தீனி வைக்க வந்தவளின்
புன்னகையையும்
பார்க்க நேர்ந்தது!

அது முதலாக
பரஸ்பரம் பார்வை அம்பினை
பரிமாறிக் கொள்வோம்
தூய அன்பின்
துகிலை உரித்து
தொண்டைக் குழிக்குள்
பற்றிக்கொள்வோம்

வாசகம் இல்லாமலே
சூசகமாய்
பேசிக் கொள்வோம்...
வார்த்தை உயிர்ப்பதற்குள்
வாகனம்
இடைவெளியை
அதிகரித்து விடும்
காததூரம் தாண்டிய பிறகு
இதயம் சற்றே
கனத்துப் போகும்

தனிமையில் சந்தித்த
தருணத்தில்
சலனமற்றுக் கிடந்தோமே
தவிர
சங்கமிக்கத் துணிந்ததில்லை

சில நாட்களாக
கூண்டுப்புறாவைக் காணவில்லை
கூண்டு மட்டுமே...
கூடவே - அந்த
புன்னகையையும்...

அருகிலிருந்த
வீடொன்றில் விசாரித்தேன்
வழிப்போக்கன் ஒருவனின்
விழிப்பார்வைக்கு
பலியாகிவிட்டாளாம்
பெயர் கெட்டு போவதற்குள்
பேசி முடித்து விட்டார்களாம்
தாய் மாமனுக்கு!

புறாக்களை வளர்த்த நீ
எதனை அதனிடமிருந்து
எதிர்பார்த்தாய் பெண்ணே?
கூண்டுக்குள் வாழும்
வாழ்க்கையின் வரையறையையா?

உணர்வுகளின் உயிர்
அறுந்து போகின்றவரையில்
இதுபோன்ற நிகழ்வுகள்
நீடித்துக் கொண்டுதானிருக்கும்...
--நாவிஷ் செந்தில்குமார்

வாழ்க்கை வரம்


பிறப்பு என்ன கேடு
என்று நொந்தேன் - உன்
பிம்பம் பார்த்த
பிறகு தானே உணர்ந்தேன்

மொழியிழந்து நிற்கிறேன்
விழி பிளந்து வியக்கிறேன்
எக்கவியும் எழுதாதவொன்றை
எழுதிவிட துடிக்கிறேன் - உன்
அழகு முன்னாலே
முடியாது தோற்கிறேன்...

பக்கங்கள் பல நிரப்பி
கவிதை ஒன்று
எழுதிவிட்டேன் தோழி!
தலைப்பு சூட
என்மொழி வற்றிப்போனது ஏனடி!
உன் பெயர்
சொல்லிவிட்டுப் போ பெண்ணே!
என் கவிதைக்கு
தலைப்புக் கிடைக்கும் தானே!

உன் விரல் நகமாய்
ஒரு நாள்
வியர்வை நீராய்
ஒரு நாள்
உன் காற்றறைக்குள்
ஒரு நாள்
கண்ணின் மணியில்
ஒரு நாள்
உன் நெஞ்சுக் கூட்டில்
ஒரு நாள்
மஞ்சத்தில்
ஒரே ஒரு நாள்...

இப்போதே என் ஆயுள்
முடியாதா?
உன் நினைவோடு
என் ஆவி அலையாதா?
--நாவிஷ் செந்தில்குமார்

புயல் குறிப்பு


இளமை என்னை
இம்சை செய்ய
காதல் அருமருந்தென
யார் மொழிய கேட்டோ
கள்வனே! உன்னிடத்தில்
இதயம் தொலைத்தேன்

உன் நோக்கம்
அது புரியாமல்
நெக்குருகி நான் கிடக்க
லீலைகள் தொடங்கிடும்
வேலைகள் நீ செய்தாய்...
காதலின் போர்வையில்
தேரையாய் ஊர்ந்தாய்
காரியம் புரியவே
கைங்கரியம் செய்தாய்
மஞ்சம் அழைக்க
மண்டியிட்டாய்...
கண்ணீர் காட்டி
கடைசியில் வென்றும் விட்டாய்!

புகழ்மொழி பேசி
உயிர்வழி புகுந்தாய்
உன் கற்பனை வரிகளை
என்னை காகிதமென்றாக்கி
எழுதினாய்!
பூ நசுக்கி
வாசனை நுகர்ந்தாய்
புருவம் மென்று
பெருவலி தந்தாய்
உமிழ் நீரில் என்னை
குழைத்து இன்னோர்
உருவம் செய்யத் துடித்தாய்!

நூலிழையில்
வேரினை பதித்தாய்
விழுதினை வளர்க்க
என் வெற்றிடம் பறித்தாய்...
விசயம் முடிந்ததும்
விசமம் செய்கிறாய்
வேசியம் கற்பித்து
எச்சமென்று ஏசுகிறாய்
வா! வந்து என் கறைபோக்க
வழிவகை செய்
இல்லையேல்,
உனக்கு கதி என்றாக்கிவிடுவேன்
காவல் துறையின் சிறையை...
-நாவிஷ் செந்தில்குமார்

Tuesday, May 22, 2007

அம்மா...


அம்மா...
ஈன்ற போது
வலி பொருத்து நீ
கண்ட சுகம் - அது
நிகராக
உனக்கான இவ்வரியை
பொறிக்கையிலே
உணர்ந்தேன் அம்மா...

உன்னை அழைத்துதான்
மொழி கற்றேன்...
உன் பாத சுவடு பார்த்துதான்
நடை பயின்றேன்...

உனக்கு கொள்ளி வைக்க
பிள்ளைகள் சிலர் உண்டு
என்னை அள்ளி அனைக்க
வேறு தாய் உண்டோ?

பத்து திங்கள்
எனை சுமந்து
பெற்றெடுத்த பெருமைக்கு
என்ன நான் செய்தாலும்
எள்ளளவு கை மாறே!

உன் நினைவு மறக்கும்
வேளை ஏது
மறந்தால்...
நான் இறக்கும்
நாளே அது!

விண்ணை முட்டும்
புகழ் தொடுவேன்
உந்தன் பெயரை
அங்கே முழங்கிடுவேன்...
எதிரொலி கேட்கும்
எந்தாயே...
எந்தன் பிள்ளை
பெருமை கேள் என
எதிரியிடத்தும் போய்
சொல் நீயே...
—நாவிஷ் செந்தில்குமார்